30 நிமிடங்கள் காத்திருந்த ஓ.பி.எஸ்க்கு நிர்மலா சீதாராமன் அப்பாயிண்ட்மென்ட் தர மறுத்தது ஏன்?

ஓ.பி.எஸ்.க்கு அப்பாயிண்ட்மென்ட் தர மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு

By: July 24, 2018, 4:54:21 PM

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நேற்று மாலை திடீரென டெல்லிக்கு தனது ஆதரவாளர்களுடன் கிளம்பிச் சென்றார். அவரது டெல்லி பயணம் குறித்து பல யூகங்கள் வலம் வந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, தான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கதான் டெல்லி வந்ததாகவும், தனது சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது, ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை தந்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கவே டெல்லி வந்ததாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எம்.பி மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அலுவலகத்தில் காத்திருந்தனர். சுமார் 30 நிமிடம் மூவரும் காத்திருந்த பிறகு, மைத்ரேயனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஓ.பி.எஸ் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர், மத்திய அமைச்சரை சந்திக்க அழைக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் அலுவலக அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ட்வீட்டில், “ராஜ்யசபா எம்.பி மைத்ரேயனுக்குதான் நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வாங்கியது மைத்ரேயன் மட்டுமே. அவர் தனிப்பட்ட முறையில் அனுமதி வாங்கியிருந்தார். ஆனால், அவர் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் கே.பி.முனுசாமியையும், அமைச்சரை சந்திக்க உடன் அழைத்து சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், அனுமதி பெற்ற மைத்ரேயனை மட்டும் மத்திய அமைச்சர் சந்தித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மத்திய அமைச்சர்களை சந்திக்க, எம்.பி.க்கள் வருகை தந்தால், உடன் வந்தவர்களையும் உள்ளே அனுமதிக்கும் நிகழ்வு இதற்கு முன்பு பலமுறை நிகழ்ந்துள்ளது. அதனடிப்படையில், ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்கிற மதிப்பிற்காவது ஓ.பி.எஸ்-ஐ அவர் அழைத்து சந்தித்து இருக்கலாம் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Nirmala sitharaman refused to meet ops

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X