ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் அருகே நல்லுாரில் ரூ. 53 கோடி ரூபாய் மதிப்பில் 1.06 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, செவிலியர் கல்லுாரி கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சங்கரா செவிலியர் கல்லுாரியில், ஆண்டுக்கு 60 பேர் என, 3 ஆண்டுகளில், 180 மாணவியர் சேர்ந்துள்ளனர். இதில், 66 சதவீதம் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
ஜப்பான் நாட்டிற்கு மோடி செல்லும்போது, உங்கள் நாட்டில் இருந்து செவிலியர்களை அனுப்ப முடியுமா என கேட்கின்றனர்.
செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்நாடுகளுக்கு செல்ல விரும்புவோர், அவர்களது மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
என்.எல்.பி., கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பால், செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், வெளிநாடுகளில், செவிலியர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் யோகா, தியானம் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
நமக்கு எப்படி எல்லோரும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழில் பேசினால், நல்லா இருக்கும் என தோணுதோ, அதே போல, ஜப்பான் காரர்கள், ஜப்பான் வந்து வேலை செய்யும்போது ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். ஒருவேளை, நாம் வட இந்தியாவில் போய் அவர்களோடு வேலை செய்ய வேண்டும் என்றால், இந்தியோ, பஞ்சாபியோ, கிழக்கிந்தியா என்றால், பெங்காலியோ கற்றுக்கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. நீங்கள் தாய்மொழியை மறக்க வேண்டாம். ஆனால், தாய்மொழியைத் தவிர இதர பாரதிய மொழிகளை கற்றுக்கொள்ள மாட்டேன், முடிந்தால், பிரெஞ்ச் கற்றுக்கொள்வேன் என்றால், அங்கே பிரான்ஸில் என்ன வேலை கிடைக்கும், ஸ்பெயின்ல என்ன வேலை கிடைக்கும் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புக்கு எங்கே போகிறோமோ அந்த நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லது.
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியது.
இதுமட்டுமின்றி மருத்துவத் துறைக்கும் நமது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. செவிலியர் படிப்புகளில் கவனம் செலுத்தி இளைஞர்களை இந்தப் படிப்பில் சேர ஊக்குவித்து வருகிறோம்.” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். 'டாடா' குழுமத்தின் தலைவர் சந்திரசேகர், 'டி.சி.எஸ்.,' முதன்மை செயலர் கிருத்திவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“