Tamil Nadu | நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தெலங்கானாவில் புதன்கிழமை (நவ.22) நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ’தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் சொத்துக்களைத் திருடி வருகிறார்கள். கோயில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்குப் போகின்றன’ எனத் தெரியவில்லை என்று பேசியிருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துகள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தின.
ரூ.5,500 கோடி நிலங்கள் மீட்பு
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ‘திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் கோயில் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. பரம்பரை அறங்காவலராக இருந்தவர்கள் கோயில் பொருள்களை பயன்படுத்துகிறார்கள் என்ற புகாருக்கு பின் தான் இந்த துறை உருவாக்கப்பட்டது.
திமுக ஆட்சி ஏற்பட்ட பின் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன, சான்றோர்கள் சார்ந்த திருப்பணிகள் பணியும் நடக்கிறது. 200 உலோக சிலைகள், 100 கற் சிலைகள் என மொத்தம் 400 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள். அதேபோல தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு நகர்த்தும் காய் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி திமுக என்பது தான். அதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றவுடன் வாய்க்கு வந்ததை ஆதாரம் இல்லாமல் பேசி வருகிறார்கள், என்றார்.
மு.க. ஸ்டாலின் பதிலடி
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் திமுக பிரமுகர் திருமங்கலம் கோபால் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “திமுகவில் எத்தனையோ அணிகள் உள்ளன. அதில் மற்ற அணிகளை விட சிறந்த அணி என்றால் அது இளைஞரணிதான். அது, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்ற நடை போட்டுக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
திருமங்கலம் கோபாலை கருணாநிதிக்கு முன்பே எனக்கு தெரியும். திண்டுக்கல் தீர்ப்பு நாடகத்தின்போது ஏற்பட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் எனக்கு காவலாக நின்றவர் அவர்.
இன்று சமூக வலைதளத்தை பயன்படுத்தி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். கோவில் சொத்துக்களை திமுக அபகரித்துள்ளது என கூறுகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட வதந்தி பரப்பி வருகிறார்.
நிர்மலா சீதாராமன் பகல் வேஷம்
இதை அண்ணாமலை செய்திருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். ரூ.5500 கோடி சொத்துக்கள் திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் மீட்கப்பட்டுள்ளன.
பல கோவில்களுககு கும்பாபிஷேகம் செய்துள்ளோம். நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.
உண்மையான பக்தி இருந்தால் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். ஆனால் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த சிலர் செயல்படுகின்றனர்” என்றார்.
அவதூறு பரப்பிய காவல் அதிகாரி
தொடர்ந்து ஒரு போலீஸ் அதிகாரி வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி போடுகிறார். அதற்கு நாம் வழக்குப் போட்டுள்ளோம். இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்; இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் சொன்னதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புகின்றனர்.
இதை வாட்ஸ்அப்பில் போட்டுள்ளவர் ஒரு ரிட்டயர்டு போலீஸ் ஆபிசர். இப்படியெல்லாம் திட்டமிட்டு வளர்ந்து வரும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்த வேண்டும்“ என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“