திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க ஓ.பி.சி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதனையடுத்து, அதற்கு நன்றி கூறும் வீடியோவை தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார் சூர்யா சிவா.
நேற்று விஜயதசமி நிகழ்ச்சியில் இவருக்கு தர்மரட்சகர் விருது வழங்கப்பட்டது. இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இது குறித்த விபரம் வருமாறு:
இதையும் படியுங்கள்: தமிழிசை விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இடம் இல்லையா?
திருச்சி சூர்யா சிவா இளைஞர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் கொண்டாடப்படக் கூடியவர் என்பதாலும் இந்து மதத்திற்கு ஆதரவாக அவரது செயல்பாடுகள் இருப்பதாலும் அவரை விருதுக்கு தேர்வு செய்ததாக நித்தியானந்தாவின் ஆசிரமம் காரணம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நித்தியானந்தாவிடம் இருந்து கைலாசா தர்ம ரட்சகர் விருதை பெற தாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என உருகி நன்றி கூறியுள்ளார் திருச்சி சூர்யா சிவா.
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா சிவா அண்மையில் தி.மு.க தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக பா.ஜ.க.,வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு அக்கட்சியில் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளர் பதவியை வழங்கினார் அண்ணாமலை. அப்போது முதல் யூடியூப் சேனல்களில் மாறி மாறி பேட்டிகள் கொடுக்கத் தொடங்கிய அவர், பல சர்ச்சையான கருத்துக்களை கூறி கவனம் ஈர்த்தார்.
குறிப்பாக தி.மு.க மேல்மட்டத் தலைவர்கள் மற்றும் அவர்களது செயல்பாடுகள் பற்றியெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இது தனது தந்தை திருச்சி சிவாவுக்கு தி.மு.க.,வில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தே அவர் இவ்வாறு நடந்துகொண்டார். தந்தை திருச்சி சிவாவிடம் திருச்சி சூர்யா பேசுவதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனிடையே ஊடகப் பேட்டிகளில் தன்னை நோக்கி எந்தக் கேள்விகள் வந்தாலும் அதை ஈசியாக எதிர்கொண்டு பா.ஜ.க.,வினரின் பாராட்டை பெற்றார்.
இந்நிலையில் இவரது பேட்டிகளை கண்ட நித்தியானந்தா, அதில் அசந்து போய் இப்போது அவருக்கு விருது அறிவித்து அதை காணொலி மூலமே வழங்கியும் உள்ளார். திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருதை வழங்கியுள்ள நித்தியானந்தா, இந்து மதத்திற்கு ஆதரவாக திருச்சி சூர்யா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருப்பதாகவும் விருது கொடுத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
கூடுதல் சிறப்பு என்னவென்றால், நித்தியானந்தா வழங்கும் கைலாசா தர்மரட்சகர் விருதை பெறுவதற்கு தாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றும் நித்தியை சுவாமி ஜி எனவும் திருச்சி சூர்யா சிவா உருக்கமுடன் தெரிவித்திருப்பது தான். இதனை பா.ஜ.க.,வினரே ரசிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் நித்தியானந்தா மீதான பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதும் அவர் இன்னும் தன்னை தலைமறைவாகவே வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.