Nithyananda News: சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை குழந்தை கடத்தல், தவறாக அடைத்துவைத்தல் குற்றச்சாட்டின் பேரில் குஜராத் காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகிற நிலையில், கைலாசா என்ற இணையதளத்தில் அவர் தனது சொந்த நாட்டை உருவாக்கி அதற்கென கொடி, அரசியலமைப்பு மற்றும் சின்னத்தை வடிவமைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சை சாமியார் நித்யானந்தா அஹமதாபாத்தில் தனது ஆசிரமத்தை நடத்துவதற்காக தன்னைப் பின்பற்றுபவர்களிடம் நன்கொடை வசூலிப்பதற்காக குழந்தைகளைக் கடத்தி அவர்களை தவறாக அடைத்து வைத்து பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குஜராத் காவல்துறை நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகிற நிலையில், கைலாசா என்ற இணையதளத்தில் அவர் தனது சொந்த நாட்டை உருவாக்கி அதற்கென கொடி, அரசியலமைப்பு மற்றும் சின்னத்தை வடிவமைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Kailaasa.org என்ற கைலாச இணையதளத்தில் நித்யானந்தா தனக்கென சொந்தமாக இறையான்மை உள்ள ஒரு நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நாட்டின் பெயர் கைலாசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைலாச எல்லைகளற்ற இந்துக்களுக்கு உரிய ஒரு நாடு. கைலாசா நாட்டுக்கு ஒரு பிரதமருடன் அமைச்சரவையும் உள்ளதாக இந்த இணையதளம் கூறுகிறது.
மேலும், கைலாச இணையதளத்தில், கைலாச இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டாலும், இந்து ஆதி சைவ சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினர்களால் வழிநடத்தப்படுகிறது. இது இனம், பாலினம், பிரிவு, சாதி, அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், உலகின் அனைத்து நடைமுறைகளில் ஆர்வமுள்ள அல்லது துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இங்கு அவர்கள் நிம்மதியாக வாழ முடியும். அவர்களின் ஆன்மீகம், கலைகள் மற்றும் கலாச்சாரத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். இங்கே மறுப்பு, தலையீடு, வன்முறை எதுவும் கிடையாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
மேலும், இந்த கைலாச நாடு உருவாக்கப்பட்டது குறித்து இந்த இணையதளத்தில் குறிப்பிடுகையில், சனாதன இந்து தர்மத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதை முழு உலகத்துடனும் பகிர்ந்து கொள்வது. உலகிற்கு இதுவரை தெரியாத துன்புறுத்தலின் கதையை பகிர்ந்து கொள்வதற்கு உறுதியுடன் கைலாச நாடு உருவாக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி, கைலாச உண்மையான இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவொளி கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடுகிறது.
அதுமட்டுமில்லாமல், கைலாசா இணையதளத்தில், கோயில்களை அடிப்படையாகக்கொண்ட சூழலியல் அமைப்பு, மூன்றாம் கண்ணின் அறிவியல், யோகாவும் தியானமும், குருகுல கல்விமுறை, உலகளாவிய இலவச மருத்துவம், அனைவருக்கும் இலவச கல்வி, அனைவருக்கும் இலவச உணவு, கோயில்களை அடிப்படையாகக் கொண்ட மறுமலர்ச்சி வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
மேலும், கைலாச அரசில் கல்வி, கருவூலம், வணிகம், உள்ளிட்ட துறைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைலாச நாட்டின் பொருளாதாரம் தர்ம பொருளாதாரம் என்றும் இந்துக்கள் முதலீட்டில் ரிசர்வ் வங்கி இருப்பதாகவும் கிரிப்டோகரன்ஸி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“குடிமக்களுக்கு கைலாச பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் இது பரமசிவனின் அருளால் இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் பதினொரு பரிமாணங்களிலும், கைலாசம் உட்பட பதினான்கு லோகாக்களிலும் இலவசமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று கைலாச இணையதளம் கூறுகிறது.
இதனிடையே, நித்யானந்தா தனது முன்னாள் சீடரை ஆன்மீகத்தின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம், குஜராத் காவல்துறையினர் அவரது இரண்டு சீடர்களை கைது செய்தனர். மேலும், அவர் மீது கடத்தல், தவறாக அடைத்து வைத்தல், காயத்தை ஏற்படுத்துதல், அமைதி குலைக்க தூண்டியது, வேண்டுமென்றே அவமதித்தல் ஆகிய பிரிவுகளிலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் நித்யானந்தாவை குஜராத் போலீசார் வலைவீசி தேடிவரும் நிலையில், நித்யானந்தா கைலாச நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அதற்கென சின்னம், அரசியலமைப்பு, பிரதமர், அமைச்சரவை உள்ளதாகவும் கைலாச இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.