இமயமலையா, ஈகுவேடாரா? எங்கே இருக்கிறார் நித்தியானந்தா?

தென் அமெரிக்காவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு ஈகுவேடார். இங்கு நித்தியானந்தாவுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.

By: Updated: November 23, 2019, 06:29:59 PM

Nithyananda News: நித்தியானந்தாவை தேடிப் பிடிக்க குஜராத் போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நித்யானந்தா வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்து, அதிர்ந்திருக்கிறார்கள் போலீஸார்.


நித்தியானந்தாவுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே! நடிகை ரஞ்சிதாவை இணைத்து சர்ச்சை வீடியோ வெளியானது முதல் அவரைப் பற்றி நெகடிவான செய்திகள் நிறைய வர ஆரம்பித்தன. மதுரை ஆதீனத்தை அவர் கையகப்படுத்த முயன்றதாக கிளம்பிய விவகாரம், திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்தது தொடர்பான சர்ச்சை, பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் எழுந்த பிரச்னைகள், சீடர்கள் ஓரிருவர் கொடுத்த பாலியல் புகார்கள் என தொடர்ந்து பிரச்னை சுழலில் சிக்கியே வந்திருக்கிறார்.

லேட்டஸ்டாக கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன் ஷர்மாவின் நான்கு மகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆசிரம கிளையில் நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை பார்க்க பெற்றோரை அங்கு அனுமதிக்கவில்லை என்றும் அகமதாபாத் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜனார்தன் ஷர்மாவின் 4 மகள்களில் மேஜர் வயதை எட்டாத இருவரை மீட்டனர். மற்ற இருவர் தங்களின் பெற்றோரை குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டனர்.

இந்த வழக்கில் ஆசிரம நிர்வாகிகள் இருவரை போலீஸார் கைது செய்தனர். நித்தியானந்தாவை விசாரிக்க முயன்றபோது, அவரது ஆசிரமக் கிளைகளில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மேலும் விசாரிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே நித்தியானந்தா வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

பெங்களூரு நீதிமன்றத்தில் சீடர் ஒருவர் தொடுத்த பாலியல் வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குற்றப்பத்திரிகை பெற்றார் நித்தியானந்தா. அதன் பிறகு கடந்த 43 வாய்தாக்களாக அவர் நீதிமன்றம் செல்லவில்லை என்கிறார்கள், இந்த வழக்கை அறிந்தவர்கள். எனினும் நித்தியானந்தா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி, வழக்கு விசாரணையை தொடர்கிறார்கள்.

அவ்வப்போது வீடியோவில் தோன்றி உரையாற்றி சமூக வலைதளங்களில் வெளியிடும் நித்தியானந்தா, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக குஜராத் போலீஸார் விசாரணையை விரிவாக்கியபோது, ஈகுவேடார் நாட்டில் நித்தியானந்தா தஞ்சம் புகுந்திருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது.

பசிபிக் கடலையொட்டி, தென் அமெரிக்காவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு ஈகுவேடார். இங்கு நித்தியானந்தாவுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தயவில் அங்கு நித்தியானந்தா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முகாமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.


எனவே நித்தியானந்தாவை விசாரணைக்கு கொண்டு வர, வெளியுறவுத் துறை உதவியை நாடியிருக்கிறது குஜராத் போலீஸ். இதற்கிடையே இமயமலை பகுதியில் இருப்பதாக நித்தியானந்தா கடந்த 21-ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோ இமயமலைப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றே குஜராத் போலீஸ் நம்புகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Nithyananda news where is nithyananda ecuador or himalayas gujarat police searches

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X