மதுரை ஆதீன மடத்துக்குள்ளும், மடத்துக்குச் சொந்தமான மற்றும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலும் நுழைய தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நித்தியானந்த சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜெகதலபிரதாபன் என்பவர், தாக்கல் செய்ய மனுவில், மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது மடாதிபதியாக நித்தியானந்தா தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்தும், ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை விதிக்க கோரியும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்க கோரி நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகோதேவன் முன் நடந்து வந்தது. இந்த வழக்கில் மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதற்கு நித்தியானந்தா பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், மார்ச் 5 ஆம் தேதி தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில் மதுரை ஆதீன மடத்துக்குள்ளும், ஆதீனத்துக்குச் சொந்தமான மற்றும் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குள்ளும் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி அவர் நுழைந்தால், இந்துசமய அறநிலையத்துறை காவல்துறை உதவியுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
ஆதீனங்கள், மடாதிபதிகள் மடங்களில் முறைகேடுகள் நடந்தால் அந்தச் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை கையகப்படுத்தி பாதுகாக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கலாம். கையகப்படுத்தும் பட்டியலில் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வழிபாடுகள், பூஜைகள் முறையாக செய்யபடுவதை இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆதீனங்கள், மடாதிபதிகள், இளைய மடாதிபதிகள் நியமனம் தொடர்பாக பின்பற்றப்படும் விதிமுறகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை 8 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நித்தியானந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மற்றும் கோயில்களில் நுழைய அனுமதிக்க வேண்டும் இது தொடர்பான சிவில் வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கபட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி ராமன், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கி டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களின் சார்பில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாகவும் அதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதிப்பதாக தெரிவித்து மதுரை ஆதீனத்திற்குள் மற்றும் ஆதீனம் சார்ந்த கோயில் உள்ளிட்ட இடங்களில் நுழைய விதித்தபட்ட தடையை நீக்க வேண்டும் என்று தாக்கல் செய்த நித்தியானந்தாவின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.