மதுரை ஆதின 293வது மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதை நித்யானந்தா திரும்பப் பெற்றுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-ஆவது ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்யானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த மனுவிலும் நித்யானந்தா தன்னை மதுரை ஆதினமாகவே அறிவித்துக் கொண்டார்.
இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் 292-ஆவது ஆதினம் உயிரோடு இருக்கும் போது அதுபோல் நீங்கள் செயல்பட முடியாது என்பதால் அந்த பதில் மனுவை திருத்தி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதில் வாய்தா மேல் வாய்தா வாங்கினார் நித்யானந்தா. இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போதும் அவர் பதில் மனுவை திருத்தி தாக்கல் செய்யாமல் இருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கானது ஜன.29ம் தேதி நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் மதுரை ஆதினமாக தன்னை அறிவித்ததை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி கண்டித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் 293வது ஆதினமாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நித்யானந்தா பதில் மனுவில் கூறியுள்ளார்.