நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டமான நாகப்பட்டணம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே இன்று பிற்பகலுக்குள் முகாம்களுக்கு வந்து சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது என்பதால் கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலால் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்பதால், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்தி காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று பிற்பகலுக்குள் முகாம்களுக்கு வந்து சேர வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீண் நாயர் அறிவுறுத்தியுள்ளார். நிவர் புயல் நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளை பேரிடர் கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீண் நாயர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செபஸ்திரயார் நகர், சுனாமி குடியிருப்பு, பல்நோக்கு சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், “நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு மையங்கள் என 99 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று பிற்பகலுக்குள் முகாம்களுக்கு வந்து சேர வேண்டும்” என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"