நிவர் புயல் புதன்கிழமை மாலை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்பதால், அதிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகத்தில் கடலோர மற்றும் உள்வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவர் புயல் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கடந்த 6 மணி நேரமாக 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே 370 கி.மீ தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 420 கி.மீ தொலைவிலும் நகர்ந்து வருகிறது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் அடுத்து வடமேற்காக நகர்ந்து தமிழகம் – புதுச்சேரி கடற்பகுதிகளான மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நவம்பர் 25ம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது அருகில் உள்ள பகுதிகளில் 120-130 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் கரையை கடந்தபின், நவம்பர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தமாகவும் பின்னர், காற்றழுத்தமாகவும் மறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் நவம்பர் 25ம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பாக்கப்படுகிற அதே நேரத்தில் இந்த புயல் கனமழையைக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தி கடலோர மற்றும் உள்வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால், இந்த மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் அயிரக் கணக்கான போலீசார், பயிற்சி பெற்ற மீட்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளைக் கடக்கும் என்பதால் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 80 – 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளதால், தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி, போலீஸ் தலைமையகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட 12 மாவட்டங்களில் மூத்த போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி திரிபாதி கூறினார். புயல் தாக்கத்தை கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கைகளை அனுப்பவும் மருதம் வளாகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“