/tamil-ie/media/media_files/uploads/2020/11/nivar-cyclone-landfall-tamil-news.jpg)
Nivar Cyclone Landfall: தமிழகத்தை மிரட்டிய நிவர் புயல், 25 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 11.30 மணியில் தொடங்கி 26ஆம் தேதி (வியாழக் கிழமை) அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது. அப்போது பலத்த மழை கொட்டியது. காற்று பலமாக வீசியது.
மரக்காணம் அருகே கரையை கடந்தது நிவர்
நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் வருவாய் மற்றும் பேரிடர் தடுப்புத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். நிவர் அதி தீவிர புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்ததாக அவர் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், ‘புயல் இன்னும் தமிழக நிலப்பகுதியில் இருப்பதால், காற்றும் மழையும் தொடரும்’ என்றார்.
வலுவிழந்து கரையைக் கடந்த புயல், 120 கிமீ வேகத்தில் காற்று
அதி தீவிர புயலான நிவர் கரையைக் கடக்கும்போது தீவிர புயலாக வலுவிழந்தது. இதனால் காற்றின் வேகம் எதிர்பார்த்தைவிட 110 முதல் 120 கிமீ அளவில் இருந்தது. எனினும் முழுமையான சேத விவரங்கள் காலையில் தெரியவரும்.
சேத விவரங்கள் குறித்தும், நிவாரணம் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.