கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை நிவர் புயல் ஏற்படுத்தாது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை தொடர்பாக இன்று சென்னை எழிலகம் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று அதிகாலை 2:30 மணிக்கு வலுப்பெற்றிருக்கிறது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நிவர் புயல் 740 கி.மீ தொலைவில் உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்கவும், பாதிக்கப்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவும், 6 தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோரணத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கும், 2 தேசிய பேரிடர் மீட்பு படை சென்னைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
கனமழை, புயல் காற்றை எதிர்கொள்ள தேவைப்படும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்யக்கூடும் என்பதால் பெரிய ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை நிவர் புயல் ஏற்படுத்தாது என்று கணிப்பு வெளியாகியுள்ளது. இருந்த போதும், பொது மக்கள் வெளியே வர வேண்டாம், நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, நவம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.