நிவர் புயல் இன்று இரவு புதுவை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்றாலும், தமிழ்நாடு வெதர்மேன் என்றும் மக்கள் வானிலை ஆய்வாளர் என்றும் பாராட்டப்படும் பிரதீப் ஜான் வானிலை முன்னறிவிப்பில் சில விஷயங்களை துல்லியமாக அறிவித்து கவனத்தை ஈர்ப்பார்.
அந்த வகையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நிவர் புயல் குறித்து சில விஷயங்களை அறிவித்துள்ளார்.
பிரதீப் ஜான் நிவர் புயல் பற்றி பிளாகில் எழுதியுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குறிப்பிடுகையில், “நிவர் புயல் புதுச்சேரி - சென்னை கடற்கரை இடையே மாமல்லபுரம் - கல்பாக்கம் இடையே இன்று (நவம்பர் 25) இரவு அல்லது நவம்பர் 26ம் தேதி காலை கரையை கடக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தாமதத்துக்கு மன்னிக்கவும், இந்த புயல் பற்றி கூறுவதற்கு சிக்கலாக இருக்கிறது.
தமிழ்நாடு வெதர்மேன் நிவர் புயல் பற்றி குறிப்பிடுகையில், “புயல் கரையைக் கடக்கும்போது, இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 26ம் தேதி காலை வரை புதுச்செரி மரக்காணம் - மாமல்லபுரம் கடற்கரையில் 140 கி.மீ வேகத்திலும், இன்று நள்ளிரவு கடலூர் கடலோர பகுதிகளில் 100 கி.மீ வேகத்திலும், சென்னை கடற்கரை பகுதிகளிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நவம்பர் 26ம் தேதி காலை 100 கி.மீ வேகத்திலும் காற்று வீசும். ரானிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் பகுதிகளில் நவம்பர் 26ம் தேதி முற்பகல் வரை 80 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"