Advertisment

‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ. 24) மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்துகள் போக்குவரத்தை நிறுத்துவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
nivar cyclone, nivar cycloce warning, Buses transport stop in 7 districts, buses stop in 7 districts from novermber 24, நிவர் புயல், 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூ, முதல்வர் பழனிசாமி, cm edappadi k palaniswami, cm edappadi k palaniswami announced buses stop, tamilnadu, thanjavur, nagai, ariyalur, pudukkottai, thiruvarur, chenglapattu

‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ. 24) மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்துகள் போக்குவரத்தை நிறுத்துவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, என தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் காரணமாக, கடலில் சீற்றம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், புயல் மற்றும் கனமழையை சமாளிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

‘நிவர்’ புயல் கரையைக் கடக்கும்போது பொது போக்குவரத்து நடைபெற்றால் பொது மக்களுக்கு ஆபத்தும் சேதமும் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் செங்கல்பட்டு புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் நவம்பர் 25ம் தேதி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் இன்று நவம்பர் 23ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

புதிதாக உருவாகியுள்ள “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 24ம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25ம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும்போது, மிக கனமழையுடன் 120 கி.மீ வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை எதிர்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்:

வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 23.11.2020 அன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜே.சி.பி. மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

கடலோர கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரங்களான கட்டு மரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக்கழிவுகளை அகற்றி, தேவையான கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதற்கு தேவையான அளவுக்கு கிருமி நாசினி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

பெரிய ஏரிகளின் நீர் கொள்ளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துப் பொருட்கள், பசுந்தீவனங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

நடமாடும் தொலைத் தொடர்பு கருவிகளை இப்பொழுதே தயார் நிலையில் வைத்து, தொலைத் தொடர்பு பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கரோனா தொற்று ஏற்படா வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்கவும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

வட தமிழக கடற்கரையோரம் புயல் கரையை கடக்க உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகள் கடலூரிலும், 2 பிரிவுகள் சென்னையிலும், தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும்.

நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்க காவலர்கள் / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்:

வங்ககடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. நவம்பர் 24ம் தேதி முதல் 25ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீச இருப்பதால், எச்சரிக்கைவிடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொது மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகின்றனர்.

பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Tamil Nadu Thanjavur Thiruvarur Nagapattinam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment