என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
என்.எல்.சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்.எல்.சி விரிவாக்கப் பணிகளுக்காக கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. கையப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து பயிர்கள் வளர்ந்த நிலையில், என்.எல்.சி நிர்வாகம் பயிர்களைச் சேதப்படுத்தி கால்வாய் வெட்டும் பணிகளை மேற்கொண்டதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்.எல்.சி-க்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது.
என்.எல்.சி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தனது கருத்துகளை முன்வைத்தனர்.
என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக மீண்டும் பயிர் செய்யக்கூடாது என்றும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி சுப்பிரமணியம், தொழில், உட்கட்டமைப்பு வளர்ச்சி விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கையகப்படுத்திய நிலங்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
நிலத்தை கையகப்படுத்திய பின், இழப்பீடு பெற்ற விவசாயிகள் அந்நியர்களாகவே கருதப்படுவர், அவர்களுக்கு அங்கு விவசாயம் செய்ய எந்த உரிமையும் இல்லை. இருப்பினும், விவசாயிகளின் இழப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிலத்தை என்.எல்.சி-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"