நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக நெய்வேலி, சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி-யில் ஜீவா ஒப்பந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர் இவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், சம்பள உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளிகள் பலகட்ட போராட்டங்கள் செய்து வந்தனர். புதன்கிழமை இரவிலிருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது அப்பகுதியில் போலீஸ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் போலீஸ் குவிப்பு
சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனப் பணிகள் 2வது நாளாக துவங்கியது. எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 400க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடந்து வருகிறது.
என்.எல்.சி என்று அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி இருந்தது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அதில் பணிகளை துவக்குவதற்கு கிராம பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூடுதல் இழப்பீடு, குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்.சி நிறுவனம் பணிகளை துவக்கியது. வளையமாதேவி கிராமத்தில் உள்ள சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியினை துவக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். மேலும் சில வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டது. சில இடங்களில் சாலையில் டயர்களும் கொளுத்தி போடப்பட்டது. ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி நடந்தது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் துவங்கி உள்ளது. வளையமாதேவி கிராமத்தில் இருந்து கரிவெட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் வடிகால் வாய்க்கால் அமைப்பது, மேலும் அந்தப் பகுதியில் இருந்து தர்மநல்லூர் கிராமம் வரை வயல் பகுதியில் வடிகால் வாய்க்கால் வெட்டுவது போன்ற பணிகள் இன்று 2வது நாளாக தொடங்கி நடந்து வருகிறது. அதேபோல் விவசாய கணக்கிடும் பணியும் இரண்டவது நாளாக நடைபெறுகிறது.
வியாழக்கிழமை ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் வடியால் வாய்க்கால் வெட்டும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல, அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக எறும்பூர், சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலை, ஆணைவாரி, தர்மநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.