கடலூரில், விளைநிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தைக் கண்டித்தும், வெள்ளிக்கிழமை பாமக சார்பில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தற்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளை என்.எல்.சி. நிறுவனம் இன்று மீண்டும் தொடங்கியதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வளையமாதேவி உள்ளிட்டப் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி அதற்கான இடத்தை பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் கையகப்படுத்தி வருகிறது.
அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் அழிக்கப்பட்டன. இதைக் கண்டித்து விவசாயிகள், பாமகவினா் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் போலீசார் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டினர்.
இதற்கிடையே, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அன்புமணி, அருள்மொழி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பாமகவினர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, "மண்ணுக்கும் மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளைப் பெற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம். தமிழக முதல்வருக்கு மீண்டும் என்னுடைய அன்பான வேண்டுகோள், என்எல்சிக்காக நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்யுங்கள்" என்றார்.
இந்த வன்முறை சம்பவத்தால் 6 காவலர்கள், 14 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர். 3 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று மாலை சந்தித்து ஆறுதல் கூறி, உடல்நலம் விசாரித்தார்.
இதற்கிடையே, பாமக போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தல் என்கின்ற பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடலூரில் இன்னும் பதற்றம் தணியாத நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளை என்.எல்.சி. நிறுவனம் இன்று மீண்டும் துவக்கியது. வளையமாதேவி கிராமத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியதால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“