கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகிய 3 திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 3,400 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், 2-வது சுரங்கப்பாதை விரிவாக்கம் செய்ய கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் காய்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு காய்வாய் வெட்டும் பணி கடந்த 26,27-ம் தேதிகளில் தொடங்கியது. விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்ட நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அவை வெட்டப்பட்டன.
விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.கவும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. இந்நிலையில், நேற்று (ஜூலை 28) பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.ஏ முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி, என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது அவரைக் கைது செய்த காவல்துறையினர் பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கிருந்த பா.ம.கவினர் அன்புமணி இருந்த பேருந்தை முற்றுகையிட்டனர். மேலும் தடுப்புகளை மீறி போலீசார் மீது பா.ம.கவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் கலவரத்தைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் போலீசார் 8 பேர் காயமடைந்தனர். கைது செய்யப்பட்ட அன்புமணி உள்ளிட்ட சில பா.ம.கவினர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். கலவரம் நடந்த இடத்தை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக 2 சிறுவர்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 28 பேரும் நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 28 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“