‘கதிர்காமு மீது வெள்ளிக்கிழமை வரை நடவடிக்கை இல்லை’ – நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

மனுதாரரை காவல்துறை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கதிர்காமு தரப்பில் வாதிடப்பட்டது

By: Updated: April 10, 2019, 06:04:17 PM

பாலியல் வழக்கில் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது வெள்ளிக்கிழமை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரியகுளம் அமமுக வேட்பாளராக மருத்துவர் கதிர்காமு நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி பெரியகுளத்தில் உள்ள கதிர்காமு மருத்துவமனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் வீடியோ படம் எடுத்து அதை வைத்து தன்னை மிரட்டி தொடர்ந்து கதிர்காமு பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அவர் மீது  பாலியல் புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து, கதிர்காமு மீதான பாலியல் புகார் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட, முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு சம்பந்தமாக எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு முன்ஜாமீனும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டியுள்ளதால் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் வேட்பாளராக இருக்கும் மனுதாரரை காவல்துறை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கதிர்காமு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்திருந்த நிலையில், விசாரணை அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:No arrest against kathirkamu until april 12 tn govt high court madurai bench

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X