தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கூட்டத்தில் எடுக்கபடும் தீர்மானம் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விசால் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட மூன்று பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், வரும் 10ம் தேதி நடைபெறும் சங்க பொதுக் குழுவில், தேர்தல் வாக்குரிமை தொடர்பாக சங்க விதிகளில் திருத்தம் கொண்டு வர சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு திருத்தம் கொண்டு வந்தால், சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களது வாக்குரிமை பாதிக்கப்படும். புதிய திருத்தின் படி மூன்று படங்கள் தயாரித்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று பொதுக்குழுவில் சங்க விதியில் திருத்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதனால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கபடுவார்கள் எனவே வரும் 10ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, தயாரிப்பாளர்கள் சங்க பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனால், பொதுக்குழுவின் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இம்மனு குறித்து, பதில் அளிக்கும்படி, தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.