2018-19ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து குறுந்தொழில் முனைவோர் சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் அளித்துள்ள பேட்டியில், “வழக்கம் போல இந்த பட்ஜெட்டும், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு ஏமாற்றமான பட்ஜெட்டாக தான் அமைந்துள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக முத்ரா வங்கியின் மூலம் 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு என்று இவ்வளவு நிதி என்பது பொதுவாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படுவது இயல்பு. அது இந்த முறை முத்ரா வங்கியின் மூலம் ஒதுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்கள். இதுதான் ஒரு மாற்றமே தவிர, வேறு எந்த புது மாற்றமும் இல்லை. சராசரி மக்களின் தேவையான தனிநபர் உச்ச வரம்பு 2 லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என கோரிக்கை வைத்தோம். அதைக் கூட இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.

முத்ரா வங்கி திட்டம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. புதிதாக ஒருவர் அங்கு கடன் கேட்டு செல்லும் போது, அவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கடன் கிடைப்பதில்லை. இதுகுறித்து தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் புகார்கள் உள்ளது. முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் கடன் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மேலும், தொழிலை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close