ராஜஸ்தானில் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்கும்போது துப்பாக்கிச் சூட்டில் பலியான சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு இல்லை எனவும், அதனை தீவிரமாக தேடி வருவதாகவும் ராஜஸ்தான் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார். மேலும், உடன் சென்ற முனிசேகர் காயமடைந்தார்.
கொள்ளையர்களுடன் ஏற்பட்ட மோதலில்தான் பெரியபாண்டியன் உயிரிழந்திருக்ககூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. கொள்ளையன் நாதுராம் தான் பெரியபாண்டியனை சுட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில், கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்ட பெரியபாண்டியனை மீட்க, உடன்சென்ற முனிசேகர் தன் துப்பாக்கியால் கொள்ளையர்களை சுட முயன்றபோது, தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்துவிட்டது என வழக்கு திசைமாறியது.
இந்த வழக்கை ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரண் போலீசார் விசாரித்து வருகின்றனர். அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜெய்தரண் காவல்நிலைய ஆய்வாளர் பவன்லால் சௌத்ரி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெரியபாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு எதுவும் இல்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் தேடியும் துப்பாக்கி குண்டு கிடைக்கவில்லை. அந்த துப்பாக்கி குண்டை தீவிரமாக தேடி வருகிறோம்”, என தெரிவித்தார்.
மேலும், முனிசேகர் அளித்த மனு அடிப்படையில், நாதுராம், அவரது மனைவி மஞ்சு உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும், அவ்வாறு வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை எனவும் பவன்லால் சௌத்ரி கூறினார்.
நாதுராமின் மனைவி மஞ்சு உட்பட உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த பவன்லால், பெரியபாண்டியனை நாதுராம் சுட்டிருக்க வாய்ப்பில்லை என கூறினார். ஏனெனில், சம்பவத்தின்போது நாதுராம் - தேஜாராமிடம் துப்பாக்கி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
தேஜாராமின் குடும்பத்தினர் மற்றும் தமிழக காவல் துறையினருக்கு இடையே நடைபெற்ற சண்டையின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்திருக்கலாம் என அவர் கூறினார்.