சென்னையை அடுத்த அம்பத்தூரில் தமிழக அரசின் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. அங்கு பால்பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழிலாளர்களை மனிதவள நிறுவனத்திடமிருந்து பெற்று வருவதாக ஆவின் தரப்பில் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஹரிஓம் என்ற மனிதவள நிறுவனத்தின் சார்பாக குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்கவில்லை என்று ஆவின் நுழைவு வாயில் முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப்பற்றின வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இந்த சர்ச்சைக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். "ஆவின் பால் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை. தகவல் வந்ததும் அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்பி ஆய்வு செய்தோம். ஆய்வில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்மத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது", என்றார்.
குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil