போயஸ் கார்டன் வேதா இல்லம்: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசை வாரத்திற்குள் பதிலளிக்கக் கூறி உத்தரவிட்டுள்ளது.
போயஸ் கார்டன் வேதா இல்லம் - அரசு நினைவிடம்
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனுவில் “மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்தை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அரசாணையை கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது .
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வேத இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது.
மேலும் படிக்க : போயஸ் கார்டனில் இருக்கும் வேதா நிலையத்தை அளவெடுக்கும் அதிகாரிகள்
இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தன் கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே அரசு செலவில் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அரசு பிளீடர், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட விசாரணையை தள்ளிவைத்தனர்.