வங்கக் கடலில் உருவாகி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிக காற்று வீசுவதால் புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் வானிலை வலைப்பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு நவம்பர் 30ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நவ.30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இந்த அமைப்பு திருகோணமலையிலிருந்து வடகிழக்கில் சுமார் 200 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் 340 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 470 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து, பிறகு வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நவ.30 காலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே வட தமிழகம் - புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைய வாய்ப்புள்ளதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று நவ.29 கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி,புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
"கணித்தபடி சூறாவளி உருவாகாத பொதுவான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும், இலங்கை கடற்கரையில் வானிலை அமைப்பு நிலவியதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் ஃபீஞ்சல் சூறாவளி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது.
புயல் உருவாகவில்லை என்றாலும், கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தீவிர பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.