அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்தபோது, அவற்றின் இணைப்புக்காக போயஸ் கார்டன் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என, கடந்த ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி அறிவித்தார். அதன்பின்பு, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன.
வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றப்படும் என அறிவித்த நிலையில், சில நாட்களிலேயே வட்டாட்சியர் தலைமையில் அங்கு அளவெடுக்கும் பணிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, கடந்த 30 ஆம் தேதி ஜெயலலிதா வீட்டை ஆர்ஜிதம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றன. இதற்காக சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வீடு முழுவதும் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆர்ஜிதம் செய்வதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி தொடர்பு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை. அவரது வேதா இல்லத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க, நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் நில அளவீடு பணிகள் 4 மாதங்களில் முடிவடையும்" என்று தெரிவித்துள்ளார்.