காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில், அப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கு இதிலிருந்து தண்ணீர் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் உணவு சமைக்க பணியாளர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது தொட்டியில் இருந்து கடுமையாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், மதிய உணவுப் பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அடிப்படையில் பள்ளிக்கு வந்த போலீசார் குடிநீர் தொட்டியில் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக செய்திகள் பரவின.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ்.பி சுதாகர் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன், "மதிய உணவு சமைக்க தண்ணீர் எடுத்த போது தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளியின் குடிநீர் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
இதில், தொட்டியின் உள்ளே முட்டை விழுந்திருப்பது தெரிய வந்தது. இதனால் துர்நாற்றம் வீசியிருக்ககலாம். தொட்டி திறந்த நிலையில் இருப்பதால், ஒருவேளை காக்கை போன்ற பறவைகள் கொண்டு வீசியிருக்கலாம் எனக் கருதுகிறோம். மேலும், இந்த தொட்டியின் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பள்ளி வளாகத்தில் மற்றொரு குடிநீர் தொட்டி உள்ளதால் மாணவர்கள் அதை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொட்டியை இடிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின் பேரில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“