கொரோனா வைரசால் இத்தாலி, அமெரிக்க போன்ற நாடுகளில் ஏற்பட்ட துயர சம்பவங்களை போல இந்தியாவில் நடந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற எடுத்த முடிவில் குற்றம் காண முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தனிமை படுத்தும் வார்டாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற உள்ளதாக ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.
போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் முனுசாமி என்பவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இரயில் பெட்டிகளை மாற்றுவதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளை தனிமைப்படுத்தும் வார்டுகளா மாற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இரண்டு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை என்றும், தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்றும், அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட துயர சம்பவங்களை போன்று இந்தியாவில் நடைபெறாமல் தடுக்க ரயில் பெட்டிகளை தனிமைபடுத்தும் வார்டுகளாக மாற்றும் முடிவில் குறை காண முடியாது. மேலும் இந்த வழக்கில் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பித்தால் அது கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வழக்கு விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்தால், இந்த நிலையை பயன்படுத்தி, சிறந்த சேவையை வழங்குவதற்கு பதிலாக, தனியார் மருத்துவமனைகள் பணம் சம்பாதிக்கவே முயற்சிப்பார்கள் எனவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பாரதப் போரில் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்கள் தரப்பில் நல்லவர்களும் கொல்லப்பட்டனர் எனக் குறிப்பிட்ட அவர், அடையாளம் தெரியாத எதிரியுடன் மனித குலம் போரிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வழக்கு தொடர்வதை தவிர்த்து, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், "ஜூம்" செயலி மூலம் நடத்தப்படும் நீதிமன்ற விசாரணை வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது எனவும், அவ்வாறு, வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"