500 அரசுப் பள்ளிகளை தத்தெடுப்பதாக சொல்லவில்லை; பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சி.எஸ்.ஆர் மூலம் பங்களிப்போம் என்று தான் சொன்னோம் என தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
500 பள்ளிகளை மேம்படுத்தக்கூட தமிழ்நாடு அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. நிதி சுமையைக் காரணம் காட்டி பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பது நியாயமற்றது என்று சி.பி.எம், சி.பி.ஐ, பா.ஜ.க விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில், 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுப்பதாக சொல்லவில்லை என தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், மழலையர் துவக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதரவாரிய பள்ளிகள் என ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் பல்வேறு சங்கங்கள் இயங்கி வந்தன.
அந்த சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைந்து பெரும்பான்மையான சங்கங்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய ஒரு சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின் துவக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர், தனியார் பள்ளி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வாழ்த்துரை வழங்கவும் விழாவினை துவக்கி வைக்கவும் அழைத்தோம்.
அவர்கள் அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள். அரசு பள்ளிகளில் பயின்ற நாங்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். நாம் அரசு பள்ளிகளுக்கு எந்த விதத்திலாவது பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் அந்த நிகழ்வின் போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.
அதே தருணத்தில், வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளைத் தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலே நூலகங்கள், பள்ளிக்கு வர்ணம் பூசுதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப் படுத்துதல் விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான இதர General knowledge என்று சொல்லக் கூடிய பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல், அதற்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், கணினி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக் கொடுத்தல் என்று பல்வேறு வகையிலே உதவிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர
எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை, தத்தெடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரி பெருமக்கள் யாரும் சொல்லவில்லை.
அது சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்கி தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறதா? என்று கேட்பது உண்மையாகவே 500 பள்ளிகளுக்கு CSR மூலம் உதவ தயாராக உள்ளோம் என்று சொன்ன தனியார் பள்ளி தாளாளர்களுடைய அந்தப் பெருந்தன்மையை கொச்சைப் படுத்துவதாக உள்ளது.
ஆகவே தயவுகூர்ந்து இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். எந்த இடத்திலும் தத்தெடுக்கப்படும் என்ற வார்த்தை யாராலும் உபயோகப்படுத்தப்படவில்லை.
அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் CSR மூலம் பங்களிப்பார்கள் உதவுவார்கள் என்று தான் சொல்லப்பட்டதே தவிர தத்தெடுக்கும் என்ற வார்த்தை இல்லை என்பதை இந்த நேரத்திலே தெளிவுபடுத்திக் கொள்கிறோம்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.