PM Narendra Modi Swearing In: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களில் வென்று பெரும்பான்மையாக ஆட்சியமைக்கிறது பா.ஜ.க
இதன் மூலம் இரண்டாவது முறையாக பிரதமராகிறார் மோடி. பதவியேற்பு விழா நாளை மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 8 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு வந்ததாகவும், அவர் சார்பில் திமுக மூத்த எம்பிக்கள் டி.ஆர். பாலு மற்றும் ஆ. ராசா ஆகி்யோர் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, ”பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு வந்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை. மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. குடியரசுத் தலைவரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ அழைப்பு வரவில்லை” என்றார்.
அழைப்பு வந்தால் பங்கேற்பீர்களா என்றபோது, “அது குறித்து தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாஸனுக்கும் பாஜக சார்பில் எந்த அழைப்பும் வரவில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறது. மோடி சார்பில் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்துக்கு முன்னரே அழைப்பு வந்தது. அதை ரஜினியும் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் நடிகரும் மநீம தலைவருமான கமலுக்கும் பாஜக சார்பில் அழைப்பு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் மறுத்துள்ளார்.
"மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்? பொய் செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தவர்கள், பொய்யையே செய்தியாக சொல்கிறார்களே?” என கேள்வி எழுப்பியுள்ளார் திருப்பதி.