விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு

விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.

By: Updated: March 15, 2019, 06:59:36 PM

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
டாஸ்மாக் கடைகள் உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இதன் வழியாக செல்லும் சாலையை தான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர். எனவே விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தமிழகம் முழுவதும்  விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? என விளக்கமளிக்க உத்தரவிட்டடிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏன் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் செயல்படும் 3000 டாஸ்மாக் கடைகளில் தற்போது சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் 110 கடைகள் விவசாய நிலங்களில் அனுமதி பெறாமல் செயல்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. அதனால் திட்ட அனுமதி இல்லாமல் விவசாய நிலத்தில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். கடைகள் மூடியதற்கான அறிக்கையை வரும் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை மார்ச் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:No liquor drinks shops at farm land madras high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X