containment zones in chennai: பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் விளைவாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 1000 தெருக்களில் கடந்த 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை நேற்று மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார்.
அதில்,
- வீட்டுக்கு வீடு சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
- முன்கூட்டியே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
- 140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோய்த் தொற்று கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு அதிக உயிரிழப்புகளை தடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது
- கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் குடிசைப் பகுதிகளில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது
- பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிகிச்சைகளுக்காக தினமும் 100 முதல் 125 சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்
- நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளின் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது
- நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள வயதானவர்கள், நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை அரசு கண்காணிப்பின் கீழ் இயங்கும் அடிப்படை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தும் கூடங்களில் தங்க வைத்து, நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கையின் விளைவாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 1000 தெருக்களில் தொடர்ந்து 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று, அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.