மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க இருப்பதாக தகவல் பரவிய நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் பரவிய நிலையில் மறுப்பு.
ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மது விற்பனை திட்டம் இல்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுபான கடைகளுக்கு சென்று காத்திருந்து மதுவை வாங்காமல் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம். இவ்வாறு ஆர்டர் செய்யும் மதுவை ஸ்விக்கி, சொமேட்டோ சில நிமிடங்களில் ஹோம் டெலிவரி செய்கிறது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ள நிலையில் கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று சேவையை வழங்க நிறுவனங்கள் திட்டமிட்டதாக கூறப்பட்டது.
அதாவது, பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, சொமாட்டோ, பிக் பாஸ்கேட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
இந்த செய்தி குறித்து வெளியான தகவலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மது விற்கும் திட்டம் இல்லை. இது போன்ற எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் நிறுவனம் இறங்கும் திட்டம் இல்லை. மேலும், டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்படவில்லை எனவும் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“