இந்தாண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய கல்வி தேர்ச்சி முறை அமலில் உள்ளது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கூறி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன் படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அதில் தோல்வியடைபவர்களுக்கு 2 மாதத்தில் மறு தேர்வு நடத்த வேண்டும். அதிலும் தோல்வியடைந்தால், மீண்டும் அந்த மாணவர் அதே வகுப்பில் பயில வேண்டும் என அறிவித்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது.
தமிழகத்தில் இப்படியான சட்டம் அமல்படுத்தப்பட்டால், கிராம புற மாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும் என்பதால், தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்த்தனர்.
இந்நிலையில், ”பொதுத்தேர்வு முறையை நடப்பாண்டில் அமல்படுத்த அரசு ஆணை ஏதும் பிறப்பிக்கவில்லை” என தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.