மாதவனுக்கும், போலி ஐடி அதிகாரிக்கும் சம்பந்தமில்லை - சென்னை காவல்துறை

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தவருக்கும் மாதவனுக்கும் சம்பந்தமில்லை என போலீஸ் அறிவித்துள்ளது

கடந்த சனிக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள ஜெ. தீபாவின் இல்லத்தில் நுழைந்த நபர், தன்னை வருமானவரித்துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று கூறி, வீட்டை சோதனையிட வந்திருப்பதாக தெரிவித்தார்.

தகவலறிந்து போலீசாரும், செய்தியாளர்களும் தீபாவின் இல்லத்திற்கு விரைய, அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தப்பிச் சென்ற நபரை பிடிக்க போலீசார் முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரி போல் நுழைந்த போலி நபர் சரணடைந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடைய பெயர் பிரபாகரன் என்றும், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும். தனது கடைக்கு தீபாவின் கணவர் மாதவன் அடிக்கடி வந்ததாகக் கூறிய பிரபாகரன், சினிமாவில் நடிக்கவைக்க வாய்ப்புத் தருவதாக மாதவன் ஆசைக் காட்டியதாக தெரிவித்தார். பின்னர், மாதவன் தன்னை வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறி, கூரியர் மூலம் அடையாள அட்டையை அனுப்பியதாகவும், அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு தெரிவித்ததாக பிரபாகரன் வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தவருக்கும் மாதவனுக்கும் சம்பந்தமில்லை என போலீஸ் இன்று அறிவித்துள்ளது. மேலும் பிரபாகரன் பங்குச்சந்தையில் ரூ.20 லட்சம் முதலீட்டை இழந்ததால் மோசடி செய்து பணம் சேர்க்க திட்டமிட்டு இருக்கிறார் என்றும் காவல்துறை கூறியுள்ளது. போலி அடையாள அட்டை, சோதனைக்கான கடிதத்தை பிரபாகரனே தயாரித்தார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

×Close
×Close