தருமபுரியை சேர்ந்த சிவப்பிரகாசம், ஒய்வுப்பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவர்.இவர் தனது 61 வயதில், நீட் 2021 தேர்வை எழுதி தேர்ச்சிபெற்றுள்ளார். இவர் பள்ளி படிப்புகளை ஆரம்பம் முதலே அரசு பள்ளிகளில் படித்ததால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டார்.
ஆனால், அவரது விண்ணப்பம் நேற்று (வெள்ளிக்கிழமை) அன்று நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால், அவர், தனது பள்ளி படிப்பை 10, 12 என்ற வகுப்பு சிஸ்டமில் பயிலவில்லை.
தேர்வு குழு செயலாளர் டாக்டர் பி வசந்தமணி கூறுகையில், "அவர் படித்த பி.யூ.சி படிப்பு சிஸ்டம் தற்போது நடைமுறையில் கிடையாது. அவர் நீட்டில் 249 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 349 ஆவது இடம் கிடைத்தது. எனவே, முதலில் அவரது பெயரை கவுன்சிலிங் பட்டியலில் இணைத்திருந்தோம்.
ஆனால், பின்னர் உயர் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்ததில், அரசு ஒதுக்கீடு 10, 12 ஆம் வகுப்பு என்ற சிஸ்டமில் படித்தவர்களுக்கு மட்டுமே என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பெயர் நீக்கப்பட்டது" என்றார்.
இதற்கிடையில், அவர் தனக்கு கிடைக்கும் மருத்துவர் இடம் ஒரு அரசுப் பள்ளி மாணவனுக்கு கிடைத்தால் இன்னும் பலனுடையதாக இருக்கும் என்று விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil