மகாத்மா காந்தியடிகளின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில், உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியிடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களின் தீய எண்ணங்களுக்கும் இந்திய மண்ணில் இடமில்லை என்று சூளுரைப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியடிகளின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில், உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் மாலையுடன் கதர் நூல் மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்னதாகவே மெரினாவில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்றார். அங்கே, ஆளுநர் வருகைக்காக 5 நிமிடங்கள் காத்திருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவி தாமதமாக வந்தார். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அளுநர் ஆர்.என்.ரவியுடன் இணைந்து மகாத்மா காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், காந்தி சிலைக்கு அருகே சென்னை சர்வோதய சங்கத்தினர் பள்ளி மாணவிகளுடன் இணைந்து பாடிய தேச பக்தியூட்டும் பாடல்களை ஆளுநரும், முதலமைச்சரும் சிறிது நேரம் கேட்டு ரசித்தனர். சர்வோதய சங்கம் சார்பில் இருவருக்கும் கதர் நூல் மாலை பரிசளிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியதை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"