கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி
கோவையில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டி வருகிறது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் உயிரினம், மாடுகளை போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Advertisment
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் தொடங்கி ஹோட்டல்கள், ஐடி நிறுவனங்கள் வரை ஏராளமான வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அதே போல கல்வி நிறுவனங்களிலும் ஏராளமான வெளியூர் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
அந்தவகையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று திரும்பினர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு நேற்று இரவு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிட்பாக்கெட் சம்பவங்கள் அரங்கேறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்துதுறை அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/