தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரவையில் இடம் கேட்பது கூட்டணியில் உள்ள கட்சிகளின் உரிமை என்றும், இதில் எந்தத் தவறும் இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணி சார்பில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள், நடிகர் சிவாஜிகணேசன் நினைவுநாள், குமரிஅனந்தன் நினைவேந்தல் ஆகிய முப்பெரும் விழா திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் புத்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய திருச்சி முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி ஒரு கூட்டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்பாய், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோதும் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றது. பல மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது." என்றார்.
"ஆனால், வித்தியாசமான சூழல் கொண்ட தமிழகத்தில் கடந்த 57 ஆண்டுகளாகக் கூட்டணி ஆட்சி வந்ததில்லை. அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கேட்பதில் தவறு இல்லை. கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமும் இல்லை" என்று அவர் வலியுறுத்தினார்.
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், தேர்தல் ஆணைய அங்கீகாரத்திற்காக இரட்டை இலக்க எண்ணிக்கையில் இடம் வேண்டும் எனக் கேட்பதாகவும், ஆனால் யாரும் அதை ஒரு நிபந்தனையாக வைக்கவில்லை என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்டோ, அல்லது கூட்டணி ஆட்சி குறித்தோ எந்த நிபந்தனையும் விதிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்யமாட்டார் என்றும், ஆனால் வன்னியரசு போன்ற அடுத்தக்கட்ட தலைவர்கள் கூட்டணி தர்மத்தோடு பேச வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார். "திமுக கூட்டணிக்கு விழும் 4 வாக்குகளில், தங்கள் ஓட்டு 1 என விசிகவினர் சொன்னால், அந்த 4 வாக்குகளில் 3 வாக்குகள் எங்களது (காங்கிரஸ்) வாக்குகள் எனக் கூற முடியும்" என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, நடிகர் விஜய் கட்சியின் மதுரை மாநாட்டில் ராகுல்காந்தி கலந்து கொள்வாரா என்ற கற்பனைக்குத் தான் பதிலளிக்க முடியாது என்றும், காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. கூறிய கருத்துக்கு ஏற்கெனவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
செய்தி : க. சண்முகவடிவேல்