2019ம் ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்ளோ ஆகியோரின் ஜமீல் வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வக அமைப்புடன் தமிழக அரசு 2014-ம் ஆண்டில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
2014-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பில், சிறந்த ஆளுமை என்பது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றின் குறிக்கோள்களை எய்தியுள்ளனவா என ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதாகும். எனவே, நடைமுறையில் உள்ள திட்டங்களைக் கண்காணிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் ஏதுவாக, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை மேலும் வலுப்படுத்தப்படும். இப்போது நடைமுறையில் உள்ள திட்டங்களில் இடைக்கால திருத்தங்களை மேற்கொள்ளவும், வருங்காலத்தில் சிறப்பான, அதிக பயன் அளிக்கக் கூடிய திட்டங்களை உருவாக்கவும் இது உதவியாக இருக்கும். இதற்காக, அமெரிக்காவிலுள்ள உலகளவில் மிகச் சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையமான மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்படும் ஜமீல்-வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வகம் என்ற அமைப்புடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும். தமிழக அரசுடன் இணைந்து பள்ளிக் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சத்துணவு ஆகிய முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மதிப்பீடு, திறன் மேம்பாடு செய்ய உலகளவில் புகழ்பெற்ற சிறந்த பொருளாதார வல்லுநர்கள், சமூக விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஜெயலலிதா குறிப்பிட்ட ஜமீல் வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி மையம் அபிஜித்-எஸ்தர் டூப்ளே தம்பதியினருடையது.
இதனடிப்படையில் 2014-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதியன்று முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் அபிஜித் பானர்ஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக தமிழக அரசு அப்போது வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆய்வினை மேற்கொள்ள நிகழ் நிதியாண்டில் (2014-15) ஐந்து முக்கிய துறைகளின் கீழுள்ள திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி மதிப்பீடு செய்யப்படும். தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறையில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் நான்கு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அபிஜித் நிறுவன திட்டங்கள், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்துவது, தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது, இரும்புச் சத்து மாத்திரைகளை வாரந்தோறும் அளித்து பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை பாதிக்காமல் கண்காணிப்பு உள்ளிட்டவை முதல் கட்டமாக மேற்கொள்ளப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் பல திட்டங்கள் இனம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.