”திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து பலரும் தோற்றிருக்கின்றனர். அவர்களுடைய கதைகள் எல்லோருக்கும் தெரியும்”, என நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து மறைமுகமாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தன்னுடைய அரசியல் வருகை அறிவிப்பை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நேற்று கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றேன். அரசியல் பிரவேசத்தை குறிப்பிட்டு அவரிடம் ஆசி பெற்றேன்”, என கூறினார்.
இதையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “ரஜினிகாந்த் வந்து
தலைவர் கருணாநிதியை சந்தித்தது அதிசயமான ஒன்றல்ல.”, என்று கூறினார். மேலும், நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்னர் வந்து கருணாநிதியை சந்தித்ததை நினைவூகூர்ந்து, அதுபோல ரஜினிகாந்தும் வந்திருக்கக்கூடும் என ஸ்டாலின் தெரிவித்தார். ஆன்மீக அரசியல் என்ற பெயரால் பலரால் தூண்டப்பட்டு ரஜினி கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படுவதாகவும், திராவிட இயக்கத்தை அப்படி யாராலும் அழிக்க முடியாது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“ஆன்மீக அரசியலைத்தான் நடத்த போகிறேன் என ரஜினி தெளிவாக சொல்லியிருக்கிறார். திராவிட இயக்கத்தை அழிக்க பலரது தூண்டுதலால் கட்சி தொடங்கியிருப்பதாக உருவகத்தை சிலர் உருவாக்கியிருக்கின்றனர். தமிழ்நாடு திராவிட மண். பெரியார், அண்ணா, கலைஞர் பண்பட்டிருக்கும் மண். திராவிட இயக்கத்தை அழிக்க பலரும் முயற்சித்து பலரும் தோற்றிருக்கின்றனர். அவர்களுடைய கதைகள் எல்லோருக்கும் தெரியும்.”, என கூறினார்.