பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி மனிதாபிமான,நல்லெண்ண அடிப்படையில் ஆயுள் கைதிகளின் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனைய குறைத்து கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் குழுவில் மன நல மருத்துவஇயக்குனர். மருத்துவ கல்வி இயக்குனர் சிறைத்துறை தலைமை நன்னடத்தை அலுவலர் , உளவியலாளர் , மூத்த வழக்கறிஞர் சிறை மற்றும் சீர்திருத்த துறையில் துணைத்தலைவர் பதவியில் உள்ள அலுவலர் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெறுவர்.
தமிழக அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாவும், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், " முதல்வர் ஸ்டாலின் வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து அவர்களின் நன்னடத்தை, உடல் நிலை, மனநிலை, உடல் ஆரோக்கியம், தற்போதுள்ள சூழ்நிலை என அனைத்தையும் அறியும் வகையில் முன் விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த கால பாரபட்சங்களினால் கண்ணீர் நிரம்பிய சிறைவாசிகள் குடும்பத்தினரின் இல்லங்களில் மகிழ்ச்சி சூழ, நீதிபதி ஆதிநாதன் குழு விரைவில் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இக்குழு விரைந்து குறுகிய காலத்திற்குள் தனது பரிந்துரையை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அற்புதம் அம்மாள் தனது அறிக்கையில், " ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலையில் முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான ஆறு பேர் குழுவின் தன்மையே முதல்வரின் மனிதநேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தமிழக முதல்வரின் கனிவுமிக்க இந்த மனித நேய அறிவிப்பிற்கு 31 ஆண்டுகளாக சிறைவாசிகளின் துன்பங்கள் குறித்து நன்கு அறிந்தவள், நேரடி சாட்சி என்ற முறையில் எனது அன்பு கலந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.