கொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை பீதியில் வைத்திருக்க, அதில் சிலருக்கோ வெளியே சொல்ல முடியாத வேறொரு கவலை இருக்கிறது. அசைவம் சாப்பிடுவது.
Advertisment
இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா பரவுவதால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சமூக தளங்களில் யாரோ கொளுத்திப் போட, முட்டை விலை ஒன்னே கால் ரூபாய்க்கு அதலபாதாளத்துக்கு சென்றது. அதாவது கிட்டத்தட்ட 10 வருடம் பின்னோக்கிச் சென்றது முட்டை விலை.
சிக்கன் சுத்தமாக போனியாகாமல் போக, கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் இலவச பிரியாணி, அதற்கு இலவசமாக ஒரு கிலோ சிக்கன் 65 என்று தாராளம் காட்ட, அந்த வதந்தி சூழலிலும் பலரும் அதை வாங்கிக் கொண்டிருந்தனர்.
ஆட்டிறைச்சி, மீன் என அனைத்து அசைவ ஐட்டங்களின் விலையும் குறையத் தொடங்கியது. ஆனால், அதன் பிறகு அரசு, இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவாது என அறிவிக்க, மக்கள் தெளிவடைந்தனர்.
அதன் பிறகு, இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும், மக்களின் அசைவ வேட்டை குறையவே இல்லை.
இந்நிலையில், இன்று பிற்பகலில் தொலைக்காட்சிகளில் வெளியான செய்தி மக்களை சற்றே கலக்கமடைய வைத்தது. அதாவது, சென்னையில் ஏப்ரல் 12 வரை இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், இனி அசைவம் சாப்பிட முடியாது என்று சமூக தளங்களில் ட்வீட்கள் பறக்க, சில மணி நேரங்களுக்கு பிறகு மாநகராட்சி தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அதாவது, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி ஒரு நாள் மட்டும் சிக்கன், மட்டன், மீன் கடைகள் மூடப்படும். மற்ற நாட்களில் விற்பனையின் போது சமூக விலகலை பின்பற்றாமல் இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதன் மூலம் இறைச்சி கடைகள் மூடப்படாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil