சென்னை புறநகரில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழகத்தில் உள்ள 58 சுங்கச்சாவடிகளில் எதுவும் 60% சுங்கக் கட்டண சலுகைக்கு தகுதியானவை அல்ல என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (MoRTH) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி பி. வில்சன் கேள்வி எழுப்பிய நிலையில் அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த படி, மூலதனச் செலவுகளை மீட்பதற்காக விதிக்கப்படும் கட்டணத்தை 40% ஆகக் குறைப்பதற்கான அறிவிப்பை NHAI தமிழகத்தில் செயல்படுத்தத் தவறியதன் காரணம் குறித்து வில்சன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த கட்கரி, தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், பாலம், சுரங்கப்பாதை/புறவழிச்சாலை போன்ற பிரிவுகள் இந்த சலுகைக்கு தகுதியானவையாக தற்போது இல்லை. அங்கு மூலதனச் செலவு கட்டணம் தொடர்கிறது. பயனர் கட்டணம் 40% ஆகக் குறைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் டோல் கட்டணம் குறைக்கப்படும் என எதிர்பார்த்த வணிக வாகன பயனர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2016-ம் ஆண்டு முதல் இதுபோன்ற சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறித்த தகவல்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்வது இல்லை என்று லாரி ஓட்டுனர்கள் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், நெடுஞ்சாலைகளை NHAI முறையாக பராமரிக்கவில்லை. இதன் காரணமாக சாலைகளில் குறிப்பாக நெடுஞ்சாலைகளை அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் 55% விபத்துகள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகிறது. மின் விளக்குகள் மற்றும் service roads போன்ற அடிப்படை வசதிகள் முறையாக கட்டமைக்கவில்லை என்று கூறினர். இவ்வாறு இருக்கையில் சுங்க கட்டணம் மட்டும் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தனர்.
வில்சன் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தணிக்கை செய்து உண்மையான நிலையை கண்டறிய நெடுஞ்சாலைத் துறைக்கு வலியுறுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil