வடகிழக்குப் பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில், நிவாரணப் பணிகளுக்காக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் முன்பதிவு செய்த நாட்களைத்தவிர இனி வாடகைக்கு விடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குமேல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வடகிழக்குப் பருவமழையும் ஒருவேளை அதிகப்படியாக பெய்யும்பட்சத்தில் அதற்கேற்ப தயார் நிலையில் இருப்பதற்காக பேரிடர் தொடர்பான கூட்டங்களை சென்னை மாநகராட்சி சமீபத்தில் நடத்தியது.
வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வது குறித்து சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. பருவமழையையொட்டி தேவைப்படும் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சமுதாய நலக்கூடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமூதாய நலக்கூடங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019 வரை முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019 மாதம் வரை முன்பதிவு செய்தவர்களுக்கு, நிவாரணப் பணிகள் காரணமாகத் தேவை ஏற்பட்டால் குறுகிய கால முன் அறிவிப்புடன் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும். எனவே, வெள்ள நிவாரணப் பணிககள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019 வரை மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளைத் தவிர இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சமூதாய நலக்கூடங்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது”. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.