/indian-express-tamil/media/media_files/2025/06/09/81AqljjdBZt2q2p5Jvtr.jpg)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதில், குறிப்பாகத் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன.
இதனால் அறுவடை செய்த நெல்லையும், அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்களையும் இழக்கும் அபாயத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மழைநீர் சூழ்ந்த வயல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான குவிண்டால் நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகிவிட்டன. தற்போது அறுவடை செய்யப்படும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன. டெல்டா விவசாயிகளின் கூற்றுப்படி, மழையால் நனைந்த நெல்லின் ஈரப்பதம் 23% முதல் 25% வரை உள்ளது.
இந்தச் சூழலில், மத்திய அரசின் விதிமுறைகளின்படி, 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்ற விதி, விவசாயிகளுக்குப் பெரும் தடையாக உள்ளது. இதனால், 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கோரி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து, நெல் கொள்முதலில் உள்ள சிக்கலைத் தீர்க்க மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
மத்திய உணவுக் குழு இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் 9 பேர் உள்ளனர். இந்தக் குழுவினர் விரைவில் தமிழகம் வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், ஈரப்பதம் மிக்க நெல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்தியக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பு 17%ல் இருந்து 22% ஆக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.