வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுத்து வரும் நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் நிலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் குளங்களாக காட்சி அளிக்கும் விளை நிலங்களால் கண்ணீர் மல்க நிவாரணத்தை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர் சீர்காழி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள்.
122 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்து சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. 2,000-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவிழந்தூர், மாப்படுகை, பொன்னூர், அளக்குடி, ஆரப்பள்ளம், கோதண்டபுரம், மகேந்திரப்பள்ளி, ஆச்சாள்புரம், பாண்டூர், உக்கடை, அருள்மொழிதேவன், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோயில், புதுப்பட்டினம், பூம்புகார், மணிக்கிராமம், மங்கைமடம், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, நாராயணபுரம், சூரக்குடி, செம்பனார்கோவில், தரங்கம்பாடி, மணல்மேடு, வெட்டாற்றங்கரை என பெரும்பாலான கிராமங்களில் சாலைகளில் மூழ்கடித்தவாறு நீர் பெருக்கெடுக்கிறது. குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது.
அனைத்து வயல்களுமே நீரால் முழுவதுமாக சூழப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ள சாம்பா பயிர்கள் அடியோடு நாசமாகி விட்டதாக விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.
கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் இன்றி இருளில் மிகப்பெரிய அவஸ்தைகளை சந்தித்திருக்கும் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து குடிசை வீடுகளுக்கும் 25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும், நீரால் சூழப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூபாய் பத்தாயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், அனைத்து விவசாய நிலங்களுக்கும் ஏக்கருக்கு முப்பதாயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு 30,000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நீரால் மூழ்கி கிடக்கும் சீர்காழி தாலுகாவை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் உருவாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து தரப்பினரும் முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை செவிமடுத்து அவற்றை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
முதல்வரின் இந்த வருகை சிதைத்த சீர்காழியை சீராக்குமா? விவசாயிகளின் ஏக்கம் தீருமா? என்று கேள்விக்குறியுடன் காத்திருக்கின்றனர் அப்பகுதியினர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.