Weather Forecast, Red Alert In Tamil Nadu: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் படிப்படியாக வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களான, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மைய அறிக்கை
சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை முதல் தீவிர கனமழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும், என்றும் தெரிவித்துள்ளது”.
மழை குறித்த செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க - Heavy rains likely in Tamil Nadu
சென்னை வானிலை
சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் பூண்டி, மாதவரம், சோழவரம், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர்,வடபழனி குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள் பகுதிகளில் சில இடங்களிலும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதோடு இன்று காலை 8.30 அறிவிப்பின்படி, அடுத்த 2-3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 12.10 மணிக்கு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலவுகிறது. அடுத்து வரும் 2 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீடிக்கும். மிக கனமழையைப் பொறுத்தவரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களுக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்” என்றுக் கூறினார்.
ரெட் அலர்ட்
சென்னை வானிலை மைய அறிக்கையின்படி, ”தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதன் அளவு 21 செமீட்டருக்கு அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளனர், இவ்விடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலெர்ட்டில் மிக கனமழை பெய்யும் இடங்களாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதற்காக மேற்கண்ட இடங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது”.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மிக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?
காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை கடலோர பகுதியில் இது நகர்ந்து செல்கிறது. இதனால் சென்னையில், காற்று வடமேற்கு திசையில் வீசும். பகல் பொழுதில் சென்னையில் லேசான மழை பெய்யவே வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று பகல் முழுவதும் லேசான மழை இருந்துக் கொண்டேயிருக்கும். புதுக்கோட்டை, ராமநாதபுரம் பெருமழையால் அடித்து நொறுக்கப்படும். கேரளாவில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், கன்னியகுமாரி, டெல்டா மாவட்டங்களும் அதிக மழையைப் பெறும். கடலோர கர்நாடகத்திலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
சேலம், நீலகிரி மாவட்டத்தினருக்கு நிச்சயம் லீவு கிடைக்கும். பாம்பனில் அதிகபட்சமாக 183 மி.மீ மழை பெய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.