தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில், இயல்பை விட 18 சதவீதம் அதிகமான மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும் மழை பதிவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்தாண்டு 74 சதவீதமும், நடப்பாண்டு 43 சதவீதமும் இயல்பை விட அதிகம் மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, கேரளா, தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“