கூகுள் பே பயனர்கள் உஷார்… சென்னையில் ரூ25 லட்சம் சுருட்டிய கும்பல்!

போலியான ஆவணங்கள் மூலம் வங்கி கணக்குகளை உருவாக்கி, அந்த கணக்குகளுக்கு கூகுள் பே மூலம், மோசடி செய்த பணத்தை மாற்றியுள்ளனர்.

Northern gang arrested for bank fraud using sim swap method: தமிழகத்தில் புது விதமாக Sim Swap முறையில் மோசடி செய்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தினம் தினம் விதவிதமான மோசடி பற்றி செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த வகையான மோசடி சற்று வித்தியாசமானதும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதுமானது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து, ரூ.25 லட்சம் கடந்த நவம்பர் மாதம் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் மருத்துவமனையின் வங்கி பரிமாற்றங்களுக்காக 5 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டுகள் தொலைந்து விட்டால் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 5 டம்மி சிம் கார்டுகளும் சிம் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சிம் கார்டு எண்ணை மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்துள்ளனர்.

தற்போது அந்த கணக்கில் இருந்து தான் பணம் மாயமானது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கணக்கில் உள்ள பணம், மேற்கு வங்கத்தில் உள்ள 16 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், அந்த வங்கி கணக்குகளின் முகவரிகள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், சம்பந்தபட்ட வங்கி கணக்குகளை கண்காணித்து போலீசார், அந்த கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படும் ஏடிஎம்-ஐ அடையாளம் கண்டனர். பின்னர் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க வந்த சம்பந்தப்பட்ட கணக்குகளின் ஏடிஎம் அட்டை வைத்திருந்த 2 பேரை, முன்னரே அங்கு காத்திருந்த சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய நிறுவனங்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு சிம் கார்டு நிறுவனங்கள் கூடுதலாக டம்மி சிம் கார்டுகளையும் வழங்குகின்றன. இந்த டம்மி சிம் கார்டுகளை இமெயில் மூலமாகவே ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இதனைத் தெரிந்துக் கொண்ட மோசடி கும்பல், மருத்துவமனையின் தகவல்களை தெரிந்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதாவது மருத்துவமனையின் சிம் தொலைந்து விட்டதாக கூறி, சிம் கார்டை கேன்சல் செய்து, புதிய சிம்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போலியான ஆவணங்கள் மூலம் வங்கி கணக்குகளை உருவாக்கி, அந்த கணக்குகளுக்கு கூகுள் பே மூலம், மோசடி செய்த பணத்தை மாற்றியுள்ளனர்.

மோசடி குறித்தும், மருத்துவமனை தரப்புக்கு சிம் கார்டு நிறுவனங்கள் சிம் கேன்சல் செய்யப்பட்டது தகுந்த தகவல்களை அளிக்காதது குறித்தும் விசாரிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Northern gang arrested for bank fraud using sim swap method

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com